அப்புரு நூல் வெளியீட்டு உரை
அனைவருக்கும் வணக்கம் வம்பன் செபா சிறுகதையிலிருந்து சொல்வதாக இருந்தால் மஞ்சளும் சிவப்பும் கலந்த மங்கைப் பார்வையின் மாலை பொழுதில் அப்புரு எனும் சிறுகதை நூல் வெளியீடு காண்கிறது. இந்த உலகில் ஆடம்பரமான பொருள் எது என்றால் இலக்கியம்தான். அந்தப் பொருளை ஜனநாயகப்படுத்தியதில் வெகுஜனப்படுத்தியதில் பாமரத்தனம் படுத்தியதில் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களுக்கும் பங்கு இருக்கிறது. இந்த உலகில் கடினமான, கனமான, இறுக்கமான பொருள் எதுவென்றால் இலக்கணம்தான். இந்த இலக்கணத்தைத் தற்காலத்தில் மிருதுவாக்கியதில் மென்படுத்தியதில் இலகுவாக்கியதில் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களுக்கும் பங்கு இருக்கிறது. இவர்களால் இந்நூல் வெளியீடு கண்டிருக்கிறது. வம்பன் எனும் சொல்லுக்கு நேரெதிர் பதம்தான் அப்புரு. இவ்வளவு காலம் வம்பனாக தெரிந்த ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமான செபா இனி அப்பு என்னும் பெயர்ச்சொல்லாக, அப்புரு எனும் வினையெச்சமாக மாறுகிறார். இதையே வேறு மொழியில் சொல்வதாக இருந்தால் கவிஞர் செபா சிறுகதையாளர் செபா ஆகிறார். கவிஞருக்கும் சிறுகதையாளருக்கும் என்ன வித்தியாசம்? கவிஞர் தன் வாசகனைத் தோளிட்டு கூட அழைத்துச்செல...