அமைதி, அமராவதிகளின் வானொலி தன் முதல் அலைவரிசை ஒலிபரப்பைத் தொடங்குகிறது. நேயர்களுக்கு வணக்கம்.
நூல் வெளியீட்டு விழாவில் வாசகர்களுக்கு வணக்கம் சொல்வதுதான் மரபு. மாறாக இங்கு நான் நேயர்களுக்கு வணக்கம் சொல்ல காரணம், இங்கு வெளியீடு காண்பது அமராவதிகளின் வானொலி.
Silence, The court is in session விஜய் டெண்டுல்கர் எழுதிய பிரபல நாடகம்.
இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் யாவும் அமைதி எனும் சிற்றிதழில் வெளிவந்தவை. இந்த இதழை நடத்தியவர் இந்நூலின் ஆசிரியர் கவிஞர் உன்னதன் அவர்கள். ஆகவேதான் அமைதி, அமராவதிகளின் வானொலி தன் ஒலிப்பரப்பைத் தொடங்குகிறது என்று தொடங்கினேன்.
செங்காந்தள் சோழன் எனும் பதிப்பகம் வழியே இந்நூல் வெளிவந்திருக்கிறது. வந்திருக்கிறது என்று சொல்வதைக் காட்டிலும் வடிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வதே சரியாக இருக்கும். மலர்களில் செங்காந்தள் மலருக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது. புதுக்கோட்டை எழுத்தாளர்களின் நூல்களை இப்பதிப்பகம் தொடர்ந்து வெளிக்கொண்டு வருகிறது. இதற்கு முன்பு சோலச்சியின் ஆப்பையால் ஒரு அடி, சின்னக் கனகு வின் தப்புத் தப்பாய் நூல்கள் வெளிவந்தன. இந்த வரிசையில் கவிஞர் உன்னதன் அவர்களின் அமராவதிகளின் வானொலி வெளிவந்திருக்கிறது.
நாங்கள் சிறிய வயதில் தாழம்பூவை பறித்துவந்து அதில் மூக்குத்திப் பூவை சூடி அழகு பார்ப்போம். பூவுக்கு பூச்சூடி அழகு பார்ப்பது ஒரு கலை. அப்படியாக செங்காந்தள் பூவுக்கு மல்லிகைப்பூ சூடி அழகு பார்ப்பதாக அட்டைப்படம் வடிக்கப்பட்டுள்ளது.
செங்காந்தள் பதிப்பகம் வழியே வெளிவரும் எல்லா நூல்களையும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமே வெளியிட்டு வருகிறது. அப்படியென்றால் செங்காந்தள் சோழன் பதிப்பகம் புதுக்கோட்டை எழுத்தாளர்களின் படைப்புகளை நிறைய நீங்கள் பதிப்பிக்க வேண்டும். கலை இலக்கியப் பெருமன்றம் அதை தொடர்ந்து வெளியிட வேண்டும் என்கிற விருப்பத்தை வேண்டுகோளாக வைக்கிறேன்.
வானொலி ஒலிபரப்பில் நாடகத்திற்கென்று முக்கிய இடம் உண்டு. நாடகத்தை ஒரு எழுத்தாளர் எழுதிக் கொடுப்பார். அந்த பாத்திரத்தை நாடக மாந்தர்கள் ஏற்று நடிப்பார்கள். ஒரு பாத்திரம் கனமான பாத்திரமாக இருக்கும். அதை ஏற்று நடிக்க பொருத்தமான ஆள் கிடைக்கமாட்டார்கள். எங்கும் தேடுவார்கள். கடைசியில் அந்த நாடகத்தை எழுதியவரே அந்த பாத்திரத்தை ஏற்று நடிப்பார். அப்படியாக இந்ந நூலை வெளியிடுகின்ற இரா. இராஜேந்திர சிங் இருக்கிறார். இந்த நூலுக்கு அணிந்துரை தந்திருக்கிறார். அவரே நூலை வெளியிட்டு சிறப்பும் செய்கிறார். அவருக்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தலைவர் என்கிற முறையில் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவரது அணிந்துரையில் ஓரிடத்தில் எழுதுகிறார் இலக்கியம் என்பது வாழ்வின் கண்ணாடி. Literature is The Mirror of Life. இந்தச் சொல்லின் ஒவ்வொரு சொல்லையும் CABS எழுத்துடன் கூடிய சொல்லாக பயன்படுத்தியிருக்கிறார். அப்படியென்றால் கவிதைக்கு ஒவ்வொரு சொல்லும் முக்கியம் என்பதைச் சொல்லும் விசயமாக அந்த வாக்கியத் தொடர் இருக்கிறது.
இந்த உலகில் அழகான கவிதை என்பது நிலவோ பனித்துளியோ சூரியனோ அல்ல. கண்ணாடிதான். ஆண் பெண்ணிடம் மயங்குவான். பெண் ஆணிடம் மயங்குவாள். ஆனால் அவன் அவனிடமும் அவள் அவளிடமே மயங்க முடியுமா? கண்ணாடி இதைதான் செய்கிறது. கவிதையும் இதையே செய்கிறது.
கலை இலக்கியப் பெருமன்ற விழாவுக்கு தோழர் விடுதலைக் குமரன் அவர்களை அழைக்க வேண்டும் என்பது எனது பேராசை. அந்த ஆசை இன்று நிறைவேறியிருக்கிறது. தோழர் விடுதலை குமரன் அவர்களின் வருகை இந்த விழாவை வேறொரு வகையில் பொறுத்தம் கொள்கிறது.
இது அமராவதிகளின் வானொலி. அமராவதி வானொலி எதைப் பாடும்? அல்லது எதைப் பாட வேண்டும்?
தமயந்தி வானொலி எதைப் பாடும்? நளனைப் பாடும்.
சாவித்திரி வானொலி எதைப் பாடும்?
சத்தியனைப் பாடும்.
லைலா வானொலி எதைப் பாடும்?
மஜ்னுவைப் பாடும்.
கிளியோபாட்ரா வானொலி? ஆண்டனியைப் பாடும்.
வள்ளி வானொலி முருகனைப் பாடும்.
அப்படியென்றால் அமராவதிகளின் வானொலி எதைப் பாட வேண்டும். அம்பிகாபதிகளைப் பாட வேண்டும். அப்படிப் பாடவில்லை. இந்த வானொலி சமூகத்தைப் பாடுகிறது. சமூகத்தில் நிலவும் இன்னல்களைப் பாடுகிறது. காதலால் நிகழும் துயரங்களைப் பாடுகிறது. அதன் வன்மங்களைப் பாடுகிறது.
இந்த சமூகத்தை தொடர்ந்து அவதானிப்பவர் விடுதலை குமரன் அவர்கள். சமூகத்தோடு உரையாடுகிறவர். ஆகவே அவர் இந்த நூலைப் பெற்றுக்கொள்வது பொருத்தமாக இருக்கிறது.
இந்த விழாவில் வேதரத்தினம் வாழ்த்துரை வழங்குகிறார். இவர் வானொலி போன்றவர். வானொலி பார்க்க எளிமையாக இருக்கும். அதன் காதைத் திருகினால் அதிசயம் நிகழ்த்தும். அப்படியானவர்தான் வேதரத்தினம். இவரை நான் புதுக்கோட்டையின் வரலாற்றுக் களஞ்சியம் என்பேன். எனது அடுத்த நூலான புதுக்கோட்டை சமஸ்தானம் இறுதி 200 நாட்கள் எனும் நூலை இவரிடம் கொடுத்தே வரலாற்று திருத்தம் செய்தேன். புதுக்கோட்டை மட்டுமல்ல, உலக பேரறிவு களஞ்சியமாக திகழ்கிறவர் அவர். இவர்களோடு எனது ஆசிரியரும் எழுத்தாளருமான சி. பாலையா அவர்கள், எழுத்தாளர் பாண்டிச்செல்வம் அவர்கள், சோலச்சி, ஒட்டடை பாலச்சந்தர் என்று பேராளுமை கொண்ட அவையில் இந்த நூல் வெளியீடு காண்கிறது.
கவிஞர் உன்னதன் அவர்கள் எஸ்.மோகன்ராஜ் பெயரில் எழுதிய உன்னதபுரம் கிழக்கு நாவலை வாசித்து அவரிடம் பேசினேன். அந்த நாவல் குறித்து எழுதவும் செய்தேன். அந்த நாவலின் பெயரையே உன்னதன் என்று புனைபெயராகச் சூட்டிக்கொண்டார். 37 ஆண்டுகள் வருவாய் துறையில் பணியாற்றி துணை ஆட்சியராக பணி நிறைவு பெற்றிருக்கிறார்.
நான் சமீபத்தில் இப்படியொரு நாவல் எழுதலாமா என்று யோசித்தேன். நான் பிறந்த 1983 _ 1984 காலக்கட்டத்தில் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும்? இளையராஜாவின் எந்த படத்தின் இசை காற்றைச் சுத்திகரித்திருக்கும்? எந்த இரு நாடுகளுக்கிடையில் போர் நிகழ்ந்திருக்கும்? எந்தப் பொருளின் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் தொட்டிருக்கும்?, எந்த பொருளின் விலை அதளபாதாளத்திற்கு போயிருக்கும்? தங்கம் விலை எவ்வளவு , பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு இதையெல்லாம் வைத்து நாவல் எழுதலாமா என்று யோசித்தேன். அப்படியாக எழுதினால் கவிஞர் உன்னதன் இக்காலக்கட்டத்தில் நடத்திய அமைதி எனும் இதழும் இடம் பெறும். அதில் உன்னதனும் இடம் பெறுவார். நான் பிறந்த காலத்தில் அவர் எழுதிய கவிதைகளை இத்தனை ஆண்டுகள் கழித்து நூலாக வெளியிடுகிறார். தற்கால கவிதைகளில் இருக்கும் அத்தனை அம்ச இலட்சணங்களும் இத்தொகுப்பில் இருக்கிறது.
கவிதைக்கு கற்பனையும் உவமையும் அழகு சேர்ப்பவை. இத்துடன் இசையும் சுதியும் சேர்கையில் அந்தக் கவிதை மேலும் அழகுபெறும். அப்படியாகவே சேரிப்பூவே செவ்வந்தியே எனும் கவிதை அழகு பெறுகிறது.
சேரிப்பூவே செவ்வந்தியே
நீ சிரித்த நாட்டின்
சிக்கல்கள் அறிவாயோ
சிக்கல்கள் அறிந்தே - நீ
சிரிப்பை விழுங்கி
சீக்கிரம் உதிர்ந்தாயோ
முச்சந்தியில் சாதியை ஒழிப்பார் வீட்டு
முற்றத்தில் அதையே வளர்ப்பார்
காதலை எருவாக்கி
கண்ணீரை நீராக்கி
துயரப்பூ பறிப்பார் பிறர்
துன்பத்தில் சிரிப்பார்
கைக்கு எட்டினால் சுரண்டுவார் வான்
கதிரையும் நிலவையும் திருடுவார்
தட்டிக் கேட்டவர்
தலையை அறுத்து
தலைவராய் ஆவார் இவர்
தாங்கவும் படுவார்.
மலிவான விலைக்கு விற்பார் - மான
ஆடையை மதிப்பை இழப்பார்
கல்லா நிரப்ப
எல்லாம் செய்து
மாளிகை கட்டுவார் இவர்
யாரிடம் மாட்டுவார்
இக்கவிதையை சாதாரணமாக வாசித்தால் மனித குலத்தைக் காட்சிப்படுத்துவதாக தெரியும். அதையே ராகத்துடன் பாடினால் நல்ல இசையுடன் கூடிய பாடலாக மாறும்.
அமராவதிகளின் வானொலி கவிதையில்
நூலை விட மெல்லிய
இடைகொண்டவர்கள்
கண்ணாடித்தூளை
இரைப்பையில் தூவிக்கொள்கிறார்கள்
என்கிறார். காதலின் பெயரால் நிகழும் கொலையைத்தான் இப்படியாகச் சொல்கிறார்.
இன்று
பூச்சி மருந்துகள்
இந்தத் தேசத்துக்
காதலர்களுக்காகவே
தயாரிக்கப்படுகின்றன
என்று எழுதுகிறார்.
இன்று என்பதை இன்றும் என திருத்தியும் மாற்றியும் வாசிக்கையில் 1987 ஆம் ஆண்டு எழுதிய கவிதை தற்கால கவிதையாக மாறுகிறது.
நடந்து வருகிறாள் நாயகி
மெல்லப்போ பாதையே
என்கிற கவிதை இத்தொகுப்பில் உச்சம் என்பேன். நாயகிக்காக பாதையை மெல்லப் போ என வேண்டும் கெஞ்சல் எவ்வளவு அழகுடன் கூடிய கற்பனை பாருங்கள்.
ஒரு கவிதை என் இளமைக்காலத்தை கண் முன்னே கொண்டுவந்தது. அப்போது எனக்கு பதினைந்து வயது இருக்கும். ஒரு அம்மா என் அம்மாவை தேடி வந்தவர் எங்கே உன் அம்மா என்று கேட்டார். நான் சொன்னேன். அம்மா தீபாவளி செய்கிறாள். அவளுக்கு ஆச்சரியம். வந்து பார்த்தாள். அம்மா முறுக்கு சுட்டுக்கொண்டிருந்தாள். அதன் பிறகு நான் சொன்ன அம்மா தீபாவளி செய்கிறாள் ஊரில் பேசும் பொருளானது. உண்மையில் தீபாவளியைச் செய்ய முடியுமா, பலகாரம் செய்யும் எல்லா தாய்களும் தீபாவளியே செய்கிறார்கள்.
ஓவியமே இரையானது எனும் கவிதையில் ஒரு பெண் சிக்கனம் செய்கிறாள். அந்தக் கவிதை இப்படி தொடங்குகிறது.
அவள் சிக்கனம் செய்தாள்
அவள் மேசை
உண்டியலெல்லாம் காசு
அவள் சுத்தம் செய்தாள்
வீட்டுத் தோட்டமெல்லாம்
மகரந்த மணம்
அவள் கோலம் போட்டாள்
தெருவெல்லாம் போக்குவரத்து நெரிசல்
அவள் ஒப்பனை செய்தாள்
அவளைச் சாப்பிட்டு பசியாறியது
கண்ணாடி.
இக்கவிதையில் கடைசி பத்தி இறந்த காலவெளியில் பாடப்பட்டுள்ளது. இதை நிகழ்கால தொடர் காலவெளியாக பாடும் பொழுது இக்கவிதை மேலும் அழகு பெறுவதாக கருதுகிறேன். காரணம் பெண்ணின் ஒப்பனை சட்டென முடிந்துவிடுவதில்லை. அப்படியாக ஒப்பனை செய்யப்பட்ட பெண்ணை விழுங்கும் கண்ணாடி அவசரகதியில் விழுங்கி விடுவது இல்லை. ஒரு பெண்ணை தன் ஆயுள் முழுவதும் விழுங்கிக்கொண்டு இருக்கவே விரும்புகிறது கண்ணாடி.
ஆகவே இந்தக் கவிதையை நிகழ்காலப்படுத்தி வாசிக்கிறேன்.
அவள்
ஒப்பனை செய்கிறாள்
அவளைத் தின்று
பசியாறுகிறது
கண்ணாடி
இப்படி காதலும் சமூகமும் இரண்டற கலந்த தொகுப்பைத் தொடர்ந்து மேலும் பல படைப்புகளைத் தர வேண்டுமாய் கவிஞர் உன்னதன் அவர்களைக் கேட்டுக்கொண்டு அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து எனது தலைமை உரையை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.
(01.11.2026 ஞாயிறு அன்று புதுக்கோட்டை ஓய்வு பெற்ற காவலர் சங்க கட்டடத்தில் நடைபெற்ற கவிஞர் உன்னதன் அவர்களின் அமராவதிகளின் வானொலி நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய தலைமை உரை)
கருத்துகள்
கருத்துரையிடுக